புதிய அத்தியாயம் பிரதமர் மன்மோகன் சிங், அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே இராணுவ ஒப்பந்தமொன்று கையெழுத்தானது; அவர் அமெரிக்கா சென்றிருந்த பொழுது, அணு சக்தி ஒத்துழைப்பு குறித்த மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எத்தனையோ ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் விட, தற்பொழுது கையெழுத்தாகியுள்ள இவ்விரு ஒப்பந்தங்களை வரலாற்றுத் திருப்பம் என்றும்; குறிப்பாக, அணுசக்தி குறித்த ஒப்பந்தம் இந்தியாவை வல்லரசாக்க உதவும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க ஆதரவாளர்கள் உற்சாகம் பீறிடக் குறிப்பிடுகிறார்கள்.
இராணுவ ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலன்களுக்கு ஏற்ற விதத்தில், இரு நாட்டுப் படைகளும் கூட்டாக இணைந்து, உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும். இரண்டாவதாக, ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் திட்டத்தில் இரு நாடுகளும் ஒத்துழைக்கும். மூன்றாவதாக, தரை, கடல், வான் வழியாக பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, இரு நாட்டுப் படைகளும் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும். நான்காவதாக, இரு நாடுகளும் இணைந்து ஆயுதம் மற்றும் இராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபடும்.
அணு சக்தி தொடர்பாக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, சமூகப் பயன்பாட்டுக்காக (மின்சாரம் உற்பத்தி செய்வது) இயக்கப்படும் அணு உலைகள்; இராணுவப் பயன்பாட்டுக்காக (அணுகுண்டு தயாரிப்பது) இயக்கப்படும் அணு உலைகள் என இந்தியா தனது அணு உலைகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும். சமூகப் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் அணு உலைகளை சர்வதேச அணுசக்தி கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்; புதிதாக அணுகுண்டுச் சோதனைகள் நடத்தக் கூடாது; அணு ஆயுத நாடுகள் உருவாக்கியுள்ள, அணுகுண்டு தயாரிப்பதற்குப் பயன்படும் வேதிப் பொருட்களை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு இந்தியா நடக்க வேண்டும்; அணு ஆயுத நாடுகள் போட்டுள்ள ஏவுகணை சோதனை கட்டுப்பாடு குறித்த சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு, இந்தியா நடக்க வேண்டும்.
இந்த இரண்டு ஒப்பந்தங்களையும், சாதாரண வர்ததக ஒப்பந்தம் போல பார்க்க முடியாது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடைக்கண் பார்வைக்காக, இந்தியா, ""இதுதான் எங்களது அணுக் கொள்ளை''; ""இது தான் எங்களது இராணுவக் கொள்கை'' என்று கூறி வந்ததை தடாலடியாக மாற்றிக் கொண்டு விட்டது. சொல்லப் போனால், அமெரிக்காவின் மேலாதிக்க வெறிக்கு இந்தியாவைப் பலிகடா வாக்கும் அடிமைச் சாசனத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறது, மன்மோகன் சிங் கும்பல்.
------
இந்தியாவிற்குப் போலி சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்தே, ""அணி சேராமை எங்களது வெளியுறவுக் கொள்கை'' என வாய்ச்சவடால் அடித்து வருவது இந்தியாவின் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இப்பொழுதோ, இந்த வாய்ச்சவடால்களைக் கூட வெளிப்படையாக மூட்டை கட்டி வைத்துவிட்டு, அமெரிக்காவின் நாடு பிடிக்கும் ஆக்கிரமிப்பு போர்களில் இந்திய இராணுவத்தைக் கூலிப்படையாக அனுப்பும் உத்தரவாதத்தோடு இராணுவ ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்திராகாந்தி ஆட்சியின் பொழுது, சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தோடு, இந்தியா இராணுவ ஒப்பந்தமொன்றைப் போட்டுக் கொண்டது. (இந்தியாவின் அணிசேராக் கொள்கை அப்பொழுதே பல்லைக் காட்டிவிட்டது தனிக்கதை) அந்த இராணுவ ஒப்பந்தத்தைவிட, தற்பொழுது அமெரிக்க மேலாதிக்க வல்லரசோடு போடப்பட்டுள்ள இராணுவ ஒப்பந்தம் மிகவும் அபாயகரமானது. ஏனென்றால், இந்திய சோவியத் ஒப்பந்தத்தில் இந்திய இராணுவத்தைக் கூலிப்படையாக பயன்படுத்தும் விதிகள் இருந்ததில்லை.
இந்திய இராணுவத்தைக் கூலிப்படையாகப் பயன்படுத்துவது என்ற அம்சம் இந்த ஒப்பந்தத்தில் பச்சையாகச் சொல்லப்படவில்லை; ஆனால், அது, ""இந்திய அமெரிக்க நலன்கள் ஒத்துப் போனால்; ""ஜனநாயகத்தைப் பரப்புவது''; ""பன்னாட்டு நடவடிக்கை'' என்ற வார்த்தைகளின் பின்னே ஒளித்து வைக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆக்கிரமிப்புப் போரின் மூலமாகவோ அல்லது அதிரடி அரண்மனைப் புரட்சிகளின் மூலமாகவோ தனது கைக்கூலிகளைப் பதவிக்குக் கொண்டு வருவதுதான் ""ஜனநாயகத்தைப் பரப்பும்'' அமெரிக்க பாணி. ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா நடத்தி வரும் அட்டூழியங்களை அதற்குள்ளாகவா மறந்து விட முடியும்?
அமெரிக்க இராணுவத்துக்கு ஆலோசகராகச் செயல்படும் ஐ.ஏ.டி.ஏ.சி., என்ற அமைப்பு, ""ஆசிய கண்டத்தில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது; தீவிரவாதிகளைத் தேடுவது; பணயக் கைதிகளைக் காப்பாற்றுவது; அமெரிக்காவின் உயர் தொழில் நுட்ப சரக்குகளின் போக்குவரத்திற்குப் பாதுகாப்பு அளிப்பது போன்ற கடைகோடி இராணுவ நடவடிக்கைகளைச் செய்யக் கூடிய திறமைமிக்க கூட்டாளி கிடைத்தால், அமெரிக்கா தனது வலிமையை முழுமையாக தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும்'' எனக் குறிப்பிடுகிறது. அமெரிக்கா ஒதுக்கும் இந்தக் கடைகோடி வேலைகளைச் செய்யும் எடுபிடியாக இந்திய இராணுவத்தை மாற்றும் நோக்கத்தோடுதான் இந்த இராணுவ ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த் தேரில் இந்தியாவும் இப்போது பிணைக்கப்பட்டு விட்டது.
""மேற்காசியாவில் ஈராக்கிற்கு அடுத்து ஈரானில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவது; கிழக்காசியாவில் அணு ஆயுத பலம் கொண்ட வடகொரியாவை மிரட்டிப் பணிய வைப்பது; மத்திய ஆசியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளத்தை தானே கபளீகரம் செய்வது; இவை எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவைத் துள்ளவிடாமல் கட்டிப் போடுவது'' என அமெரிக்கா, ஆசியாவைத் தனது மேலாதிக்கப் பிடிக்குள் வைத்துக் கொள்ளப் பல திட்டங்களை வைத்திருக்கிறது. இதற்கெல்லாம் இந்திய இராணுவம் கூலிப்படையாகப் பயன்படுத்தப்படும்.
""பதற்றம் நிறைந்த மத்திய ஆசியா, தென்கிழக்காசியா, பாரசீக வளைகுடா பகுதிகளுக்கு அமெரிக்க போர் விமானங்கள் மிகவும் விரைவாகச் சென்றடைவதற்கு, இந்தியாவின் நவீன இராணுவக் கட்டுமானங்கள் பயன்படும்'' என்கிறார், அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த அதிகாரி.
""சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்கு, அமெரிக்க இராணுவத்திற்கு 2020ஆம் ஆண்டு வாக்கில் ஒரு நண்பன் தேவைப்படும். இதற்கு இந்தியாவின் இராணுவ வலிமை பயன்படும் என்பதை நாம் மறுக்க முடியாது'' என்கிறது ஐ.ஏ.டி.ஏ.சி. அமைப்பு. 2020இல் இந்தியா, அமெரிக்காவின் கைக்கூலி நாடாக மாறிவிடும் என்பதைத்தான் வல்லரசாகிவிடும் எனப் பூசி மெழுகுகிறார்கள் போலும். தாதாவுக்குக் கீழ் வேலை பார்ப்பவனும் தாதா தானே!
அமெரிக்கா, ஈராக் மீது போர் தொடுத்து சதாம் உசேன் ஆட்சியைத் தூக்கியெறிந்த பின், அந்நாட்டில் சில வேலைகளை ""காண்டிராக்ட்'' எடுக்க இந்தியத் தரகு முதலாளிகள் முயன்றனர். இதற்காக இந்திய இராணுவத்தை ஈராக்குக்கு அனுப்பி வைக்கவும், அப்பொழுது ஆட்சியில் இருந்த பா.ஜ.க. அரசு தயாராக இருந்தது. ஆனால், உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக பா.ஜ.க. அரசால் படையை அனுப்ப முடியாமல் போனது; இதனால் அமெரிக்காவும் வேலைகளை இந்திய நிறுவனங்களுக்குத் தர மறுத்து விட்டது.
தற்பொழுது போடப்பட்டுள்ள இராணுவ ஒப்பந்தத்தின் காரணமாக, இனி, இது போன்ற எலும்புத் துண்டுகளைப் பரிசாகப் பெறுவதற்கு இந்திய ஆளும் கும்பலுக்குத் தடையேதும் இருக்காது. ""தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு''த் தலைமை தாங்கும் அமெரிக்காவிற்கு கறித்துண்டு என்றால், அதற்கு அடியாள் வேலை செய்யப் போகும் இந்திய ஆளும் கும்பலுக்கு எலும்புத் துண்டு என்பதுதான் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான ஒத்த நலன்.
இந்தியா ""அக்னி'', ""பிருத்வி'' ஆகிய ஏவுகணைகளைத் தயாரித்துச் சோதனைச் செய்வதையும்; அவற்றை இராணுவத்தில் சேர்ப்பதையும் ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் அமெரிக்கா, இந்த திட்டத்தை முடமாக்கும் நோக்கத்தோடுதான், ""பேட்ரியாட்'' ஏவுகணைகளை இந்தியாவிற்கு விற்கவும், அமெரிக்காவின் உலகு தழுவிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தில் இந்தியாவை இணைத்துக் கொள்ளவும் சம்மதித்திருக்கிறது.
மேலாதிக்க போர் வெறிபிடித்த ரீகனின் ஆசைக் கனவான ""நட்சத்திர போர்'' (ஸ்டார் வார்ஸ்) என்ற நாசகாரத் திட்டத்தின் புதிய அவதாரம்தான் ஏவுகணை பாதுகாப்புத் திட்டம். உலகு தழுவிய அளவில் மின்னணு போரை நடத்துவதற்கான ஏற்பாட்டில் இணைந்ததன் மூலம், இந்திய ஆளும் கும்பல் ""அமைதி'', ""போர்களற்ற உலகம்'' என்ற வார்த்தைகளைப் பேசுவதற்கே அருகதையற்றதாகி விட்டது.
இந்திய இராணுவத்தையே அமெரிக்காவின் தத்துப் பிள்ளையாக மாற்றும் நோக்கத்தோடு போடப்பட்டுள்ள இந்த இராணுவ ஒப்பந்தத்தை, எந்தவொரு உயர் இராணுவ அதிகாரியும் எதிர்க்கவில்லை. இதற்குக் காரணம் இராணுவக் கட்டுப்பாடு அல்ல. அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கப் போகும் ஆயுதப் பேரத்தில் கிடைக்கப் போகும் கமிசன். கார்கில் போரில் செத்துப் போன இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்குவதிலேயே கமிசன் அடித்த இராணுவக் கும்பல், பல்லாயிரக்கணக்கான கோடி அளவில் நடைபெறவுள்ள ஆயுத பேரத்தை சும்மா விட்டுவிடுமா?
நம்மை ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தனது மேலாதிக்க நோக்கங்களுக்காக ""போயர்'' போரிலும், முதல், இரண்டாம் உலகப் போர்களிலும் இந்திய இராணுவச் சிப்பாய்களைக் கூலிப் படையாகப் பயன்படுத்தியதைப் போல, அமெரிக்கா பயன்படுத்தும். டல்ஹெளசி பிரபு கொண்டு வந்த துணைப் படைத்திட்டம் இந்திய சுதேசி மன்னர்களின் படைகளை, பிரிட்டிஷ் இராணுவத்தின் தொங்கு சதையாக மாற்றியதைப் போல, இந்த இராணுவ ஒப்பந்தம் "சுதந்திர' இந்தியாவின் இராணுவத்தை அமெரிக்காவின் தொங்கு சதையாக மாற்றுகிறது. காலனிய காலந்தொட்டே இந்திய மக்களை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டு வளர்க்கப்பட்டுள்ள இந்திய இராணுவம், அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடும் பிற நாட்டு மக்களையும் இனி விட்டு வைக்காது.
--------
அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் என்பதாலேயே , அணு ஆற்றலைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ள வட கொரியாவையும், ஈரானையும் ""போக்கிரி அரசுகள்'' எனத் திட்டித் தீர்க்கும் அமெரிக்க அதிபர் புஷ், இந்தியாவை, ""முன்னேறிய நவீன அணு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள பொறுப்பான நாடு'' எனப் பாராட்டுகிறார். நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டதற்குக் கிடைத்த பாராட்டு என்பதற்கு மேல், இதில் அலசி ஆராய்வதற்கு எதுவுமே இல்லை. ஆனால் அமெரிக்க அடிவருடிகளோ, இந்தப் பாராட்டைக் கேட்டவுடனேயே, ""இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக அமெரிக்கா மறைமுகமாக ஏற்றுக் கொண்டு விட்டதாக'' இதற்குப் பொழிப்புரை எழுதுகிறார்கள்.
இந்தியாவில் உள்ள 15 அணு உலைகளில் ஒன்றுகூட சமூகப் பயன்பாட்டுக்காக (மட்டும்) இயக்கப்படவில்லை என்பதே உண்மை. ""இந்தியாவில் உள்ள அணு உலைகளை சமூகப் பயன்பாட்டுக்கானது, இராணுவப் பயன்பாட்டுக்கானது என இரண்டாகப் பிரிப்பது கடினம்'' என அணு விஞ்ஞானிகள் கூறியிருப்பதில் இருந்தே இதனைத் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் இராணுவ ஒப்பந்தத்தின் மை உலரும் முன்பே, அணு சக்தி ஒப்பந்தத்திலும் இந்தியாவைக் கையெழுத்துப் போட வைத்துவிட்டது அமெரிக்கா.
அணு ஆயுதப் பரவல் சட்டத்தில் கையெழுத்துப் போட முடியாது; சர்வதேச அணு சக்தி கழகத்தின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட முடியாது என்றெல்லாம் வீறாப்பாக முழங்கிக் கொண்டிருந்த இந்தியா, இன்று, அணுசக்தி தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றம் வகுக்கும் விதிகளுக்கும் கட்டுப்படுவதாக ஒப்புக் கொண்டுள்ளது.
ஒப்பந்தம் என்றால், அதில் கையெழுத்துப் போடும் இரண்டு தரப்புக்குமே சமமான அளவில் இலாபம் இருக்க வேண்டும். இந்தியா, தனது அணு சக்தி கொள்கையையே மாற்றிக் கொண்டுள்ளது. இதற்குப் பிரதிபலனாக அதிபர் புஷ், ""அணு தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குத் தர விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தளர்த்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் முயற்சி செய்வேன்; அணு ஆயுத வல்லரசு நாடுகளிடம், இந்தியாவை விதிவிலக்காகப் பாவித்து, அணு வேதிப் பொருட்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளைத் தளர்த்துமாறு கோருவேன்'' என்ற வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த அணு சக்தி விஞ்ஞானிகளோ, ""வாக்குறுதிகள் யாருக்கு வேண்டும்? எங்களுக்கு யுரேனியம் தான் வேண்டும்'' என்று முணுமுணுக்கிறார்கள். அடுத்தடுத்து பல அணு உலைகளை இந்தியா அமைத்திருந்தாலும், அவற்றுக்குத் தேவைப்படும் யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்வதற்கு அமெரிக்காவைத்தான் மலைபோல நம்பியிருக்கிறது. இந்திய அணுசக்தி துறையின் குடுமி, இன்று அமெரிக்காவின் கைகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் இதிலிருந்து முடிவுக்கு வர முடியும்.
இந்தியாவிடம் அணுகுண்டுகள் இருக்கலாம். ஆனால், அவற்றைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவுமான உரிமையை இந்தியாவிடமிருந்து அமெரிக்கா இரகசியமாகப் பெற்றிருக்கக் கூடும். இல்லையென்றால், அணுகுண்டு வெடித்த நாயகன் வாஜ்பாயி, ""இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா தனக்கு தேவையான அணு ஆயுதப் பலத்தைத் தீர்மானிக்க முடியாமல் போகும்'' என்று ஏன் அச்சப்பட வேண்டும்? அமெரிக்கா, இந்தியாவைத் தனது நம்பகமான கூட்டாளி என்று ஏற்கும்பட்சத்தில், எந்த உரிமையை வேண்டுமானாலும் அமெரிக்காவின் காலடியில் சமர்ப்பிக்கும் எனப் பலமுறை நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம். இந்த ஒப்பந்தம் அதனை உண்மை என நிரூபித்திருக்கிறது.
--------
அமெரிக்காவில் கையெழுத்தாகியுள்ள இந்த இரண்டு ஒப்பந்தங்களும் திடீரென்று உருவானவையல்ல் பா.ஜ.க. ஆட்சியின் பொழுது வெளியுறவுத் துறை மந்திரியாகவும், இராணுவ அமைச்சராகவும் இருந்த ஜஸ்வந்த் சிங்குக்கும், டால்போட் என்ற அமெரிக்க அதிகாரிக்கும் இடையே இரகசியமாக நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகள் தான், இப்பொழுது அணு சக்தி ஒப்பந்தமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்ப பா.ஜ.க. முயற்சி செய்ததை, காங்கிரசு சட்டபூர்வ ஒப்பந்தமாக இந்தியா மீது திணித்து விட்டது. அதாவது பா.ஜ.க. தொடங்கி வைத்ததை காங்கிரசு முடித்து வைத்திருக்கிறது.
இந்த இரண்டு ஒப்பந்தங்களும், கையெழுத்தாவது குறித்து நாடாளுமன்றத்தில் கூடத் தெரிவிக்காமல், மிகவும் இரகசியமாகவே பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. குறிப்பாக, இராணுவ அமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கலந்தாய்வு ஒன்றில் பங்கு பெறுவதற்காக அöமரிக்காவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டுத் திரும்பினார். இனி, நாடாளுமன்றம் இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் அங்கீகரிக்கும் ரப்பர் ஸ்டாம்பு சேவையைச் செய்ய வேண்டியது தான் பாக்கி!
முதலாளித்துவ அறிஞர்களால் புனிதமாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தையே மதிக்காத காங்கிரசிடம், குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை மதித்து நடக்குமாறு போலி கம்யூனிஸ்டுகள் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு மாற்று என காங்கிரசைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் போலி கம்யூனிஸ்டுகளிடம், இந்தச் செக்கு மாட்டுத்தனத்தைத் தவிர வேறெதையும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, அமெரிக்க அடிமைத்தனத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது, போலி கம்யூனிஸ்டுகளின் தயவோடு என்பதே நடப்பு உண்மை!
..
முத்து
முத்து