Sunday, September 2, 2007

இந்திய – அமெரிக்க ஆணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க அடிவருடிகளின் அரிதாரம் கலைந்தது

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அறிக்கை கையெழுத்தான நாளில் இருந்தே, அதனை அடிமைச் சாசனம் என அம்பலப்படுத்தி, நாம் எழுதி வருகிறோம். அதேசமயம், அமெரிக்க அடிவருடிகள் அனைவரும், ""அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை வல்லரசாக்கப் போவதாக''க் கூறி, இந்திய மக்களின் காதுகளில் பூ சுற்றி வந்தார்கள். இந்தக் கெட்டிக்காரர்களின் குட்டை, இன்று அமெரிக்காவே புட்டு வைத்து விட்டது.

இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னிபந்தனையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் இந்தியா அமைதிக்கான அணுசக்தி கூட்டுறவுச் சட்டம், ""இந்தியா எவ்வளவு யுரேனியத்தைக் கையிருப்பில் வைத்திருக்கலாம் என்பதில் தொடங்கி இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது முடிய அனைத்தையும் தீர்மானிக்கும் உரிமை இனி இந்திய நாடாளுமன்றத்திற்குக் கிடையாது; அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தான் உண்டு'' எனப் பச்சையாகக் குறிப்பிட்டுள்ளது.

காலனிய ஆட்சி காலத்தில் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் மகாராணியின் கீழ் காலனிய இந்திய அரசு செயல்பட்டதைப் போல, இப்பொழுது, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் "சுதந்திர' இந்திய அரசு செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்துக்குக் கூடத் தெரிவிக்காமல், அமெரிக்காவில் வைத்துதான் கடந்த ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அறிக்கையில் மன்மோகன் சிங் கையெழுத்துப் போட்டார். இந்த அறிக்கை கையெழுத்தாகி (ஜூலை, 2005) ஒன்பது மாதங்கள் கழித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மார்ச் 2006இல் இந்தியாவிற்கு வந்தபொழுது, அணுசக்தி ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அப்பொழுதுதான், ""இந்தியாவில் உள்ள அணு உலைகளை, சிவில் அணு உலைகள், இராணுவ அணு உலைகள் என இரண்டாகப் பிரிக்க வேண்டும்; சிவில் அணு உலைகளை சர்வதேச அணுசக்தி முகாமையின் கண்காணிப்புக்கு உட்படுத்த இந்தியா முன்வர வேண்டும்; அணுகுண்டுகள் தயாரிக்கத் தேவைப்படும் யுரேனிய வகைகளை உற்பத்தி செய்வதைத் தடை செய்யும் பல்நாட்டு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்'' என்பன உள்ளிட்டு, அமெரிக்கா விதித்த பல்வேறு நிபந்தனைகளை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது மறுக்க வழியின்றி அம்பலமானது. இதன் பிறகுதான், இந்திய அணு விஞ்ஞானிகள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கத் தொடங்கினர்.
இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களைச் சமாதானப்படுத்தும் முகமாக, மன்மோகன் சிங் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே சில வாக்குறுதிகளைக் கொடுத்தார்; அணுசக்தி விஞ்ஞானிகளையும் நேரடியாகச் சந்தித்துப் பேசியதோடு, இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ""ஹைட் சட்டம்'' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமெரிக்கச் சட்டமோ, மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குப்பைக் கூடைக்குள் வீசியெறிந்து விட்டது.
···
""சமூகப் பயன்பாட்டுக்கான அணு ஆற்றல் தொடர்பாக இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும்; சிவில் அணு உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளைச் செறிவூட்டுவது; கனநீரை உற்பத்தி செய்வது உள்ளிட்ட உரிமைகளை இந்தியாவிற்குத் தருவதோடு, அவற்றுக்கான தொழில்நுட்பத்தையும்; சாதனங்களையும் பெறும் உரிமை இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டும்; சிவில் அணு ஆற்றல் தொடர்பாக மேலை நாடுகள் அனுபவிக்கும் அதே உரிமைகள் இந்தியாவிற்கும் கிடைக்கும் என்ற வாக்குறுதியை அமெரிக்கா வழங்க வேண்டும்'' இது, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளுள் ஒன்று.

அணு உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளான யுரேனியத்தைச் செறிவூட்டவும், மீண்டும் புத்தாக்கம் செய்யவும் பயன்படும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஏற்கெனவே தன்னிறைவு அடைந்துள்ள இந்தியா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் இருந்து முன்னேறிய தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்து கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்தது. குறிப்பாக, உள்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் யுரேனியம் இந்தியாவின் தேவைகளை ஈடு செய்ய முடியாமல் பற்றாக்குறையாக இருப்பதால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தியபிறகு, அதனை இந்தியாவிலேயே செறிவூட்டிக் கொள்ளும் உரிமையும் கிடைக்கும் என இந்திய அரசு எதிர்பார்த்தது.

ஆனால், அமெரிக்கச் சட்டமோ, இந்த உரிமைகளையும், இதற்கான தொழில்நுட்பத்தையும் இந்தியாவிற்கு வழங்கக் கூடாது எனத் தடை விதித்திருக்கிறது. மேலும், அமெரிக்கா உள்ளிட்டு 45 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள அணுஆற்றல் வழங்குவோர் குழுமம், இந்த உரிமையை தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விடாமல் அமெரிக்கா பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா அமெரிக்கா இடையே அணு ஆற்றல் கூட்டுறவு தொடர்பாகப் பேச்சு வார்த்தை தொடங்கிய பொழுது, இந்தியா, ""தனது சிவில் அணு உலைகளை, தனது விருப்பப்படிதான் சர்வதேச அணு ஆற்றல் கமிசனின் கண்காணிப்புக்கு உட்படுத்தும்'' எனக் கூறியதாகவும், அதன் பின்னர்தான் தனது நிலையை மாற்றிக் கொண்டு, ""தனது சிவில் அணு உலைகளை, அவற்றின் ஆயுட்காலம் முழுவதும் எவ்வித நிபந்தனையும் இன்றி சர்வதேச அணு சக்தி முகாமையின் கண்காணிப்புக்கு உட்படுத்தச் சம்மதித்ததாகவும்'' கூறப்படுகிறது. ""இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்குத் தேவைப்படும் எரிபொருளை, அந்த அணுஉலைகளின் ஆயுட்காலம் முழுவதும் வழங்குவதற்கு அமெரிக்கா உறுதியளித்த பிறகே, இந்தியா தனது நிலையை மாற்றிக் கொண்டதாக'' மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்கச் சட்டமோ, ""இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை ஆயுட்காலம் முழுவதும் வழங்குவதற்கு எவ்வித உறுதியும் அளிக்காததோடு, இந்த அணு உலைகளுக்குத் தேவைப்படும் எரிபொருளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இந்தியா இறக்குமதி செய்து சேமித்து வைக்கவும்'' தடை விதித்திருக்கிறது. மேலும், அமெரிக்காவை ஓரங்கட்டிவிட்டு, அணு ஆற்றல் வழங்குவோர் குழுமத்தைச் சேர்ந்த மற்ற நாடுகளிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய இந்தியா முயன்றால், அதனையும் தடுக்க வேண்டும் என இச்சட்டம் குறிப்பிடுகிறது.

அவனின்றி ஓரணுவும் அசையாது என்பது போல, அமெரிக்காவின் விருப்பம், கண்காணிப்பின்றி, இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளை இயக்கும் சுதந்திரத்தை இந்தியாவிற்குத் தரக்கூடாது என்பதுதான் இச்சட்டத்தின் நோக்கம்.
""அணுகுண்டு சோதனைகளை இந்தியா நடத்தியிருப்பதால், இந்தியாவிற்கு அணுஆயுத வல்லரசு என்ற தகுதி வழங்கப்பட வேண்டும்; அமெரிக்கா, ரசியா, சீனா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய ஐந்து அணு ஆயுத வல்லரசுகளை எந்தளவிற்கு சர்வதேச அணுசக்தி கமிசன் கண்காணிக்குமோ, அதைப் போலத்தான் இந்தியாவையும் கண்காணிக்க வேண்டும்; இதற்காக, சர்வதேச அணுசக்தி கமிசனில் இந்தியாவிற்கெனத் தனி விதிமுறைகளை உருவாக்க வேண்டும்'' எனக் கோரியிருப்பதாக, மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்கச் சட்டம் இவற்றுள் ஒன்றைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே, இந்தியாவின் 14 அணு ஆலைகள் அணு சக்தி கமிசனின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என மன்மோகன் அளித்திருந்த வாக்குறுதிக்கு மாறாக, அணுசக்தி கமிசனின் கண்காணிப்புக்கு இந்தியா உட்படுத்தப்பட்ட பிறகுதான், ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என அமெரிக்கச் சட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

""அமெரிக்காவின் கண்காணிப்பாளர்கள் இந்திய அணு உலைகள் பக்கம் சுற்றுவதை அனுமதிக்க மாட்டோம்'' என நாடாளுமன்றத்தில் சூளுரைத்தார், மன்மோகன் சிங். அமெரிக்கச் சட்டமோ, ""அமெரிக்கா அணுசக்தித் துறையைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் இந்தியாவின் சிவில் அணு உலைகளைக் கண்காணித்து, அவை பயன்படுத்தப்படும் விதம் பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளது.

""அமெரிக்க அதிபர், இந்தியாவின் அணுசக்தி பயன்பாடு குறித்து ஆண்டுதோறும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நன்னடத்தைச் சான்றிதழ் தரவேண்டும்; அதன் அடிப்படையில்தான் இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும்'' என்ற நிபந்தனையை அமெரிக்கா இப்பேச்சு வார்த்தையின் தொடக்கத்திலேயே விதித்தது. இந்த நிபந்தனைக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்தும், விஞ்ஞானிகளிடமிருந்தும் வந்த எதிர்ப்பையடுத்து, மன்மோகன் சிங், ""இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என நாடாளுமன்றத்தில் வாக்குறுதி கொடுத்தார்.

அமெரிக்கச் சட்டமோ, ""சான்றிதழ்'' என்ற வார்த்தைக்குப் பதிலாக, ""மதிப்பீடு'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மேல், வேறெந்த சலுகையினையும் வழங்கவில்லை.

""இந்தியாவில் கட்டப்படும் புதிய அணுக்கரு உலைகள் பற்றி; அணு ஆயுத உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டால், அம்மாற்றங்கள் பற்றி; அணுகுண்டினைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருளின் சேமிப்பு பற்றி; அவை என்னென்ன வகையான மூலப்பொருள் என்பது பற்றி; சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் வராத, இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அணு உலைகளின் செயல்பாடு பற்றி; ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு யுரேனியம் இந்தியாவிலேயே வெட்டி எடுக்கப்படுகிறது; அதில் எவ்வளவு யுரேனியம் அணுகுண்டு தயாரிப்பதற்காக ஒதுக்கப்படுகிறது; அணுசக்தியின் மூலம் ஓர் ஆண்டில் எவ்வளவு யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது'' என்பது பற்றியெல்லாம் அமெரிக்க அதிபர் ""மதிப்பீடு'' செய்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்கவேண்டும்.

""இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை அமெரிக்காவின் கொள்கைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்; அணு ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.''

""பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை (அணுகுண்டு) உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள ஈரானைக் கட்டுப்படுத்தவும்; தேவை ஏற்பட்டால் ஈரானின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு, இந்தியா முழுமையாகவும், ஊக்கத்தோடும் ஒத்துழைப்புத் தர வேண்டும்'' என அமெரிக்கச் சட்டம் குறிப்பிடுகிறது. இதனைப் பச்சையாகச் சொன்னால், இந்தியா, அமெரிக்காவின் உளவாளியாக, அடியாளாகச் செயல்பட வேண்டும் என்பதுதான்.

இந்தியா வருங்காலத்தில் புதிதாக அணுகுண்டு சோதனைகளை நடத்தாமல் தடுப்பதற்காக, ""அணுகுண்டு தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதைத் தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளில் இந்தியாவும் ஒத்துழைக்க வேண்டும்'' எனக் குறிப்பிடும் இச்சட்டம், ""எந்தக் காரணத்தை முன்னிட்டாவது, இந்தியா மீண்டும் அணு ஆயுதச் சோதனைகளை நடத்துமானால், அமெரிக்கா இந்தியா அணு சக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ஒருதலைபட்சமாக முறித்துக் கொள்ளலாம்; இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கு அளித்த சாதனங்கள் அனைத்தையும், அமெரிக்கா திரும்பப் பெற்றுவிட வேண்டும்; ஒப்பந்தம் முறிந்து போன பிறகும்கூட, இந்தியாவின் சிவில் அணுஉலைகளை மூன்றாவது நபர்கள் கண்காணிப்பதை அமெரிக்கா உறுதி செய்து கொள்ள வேண்டும்'' என நிபந்தனைகளை விதித்திருக்கிறது.···இந்தியாவின் அரைகுறை இறையாண்மையைக் கூட உருவிக் கொண்டுவிட்ட இந்தச் சட்டம், இந்திய அரசிற்கும் அமெரிக்க அரசிற்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவரும் இரகசியப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளுமே, இந்த விசயம் குறித்து கூட்டுக் களவாணிகளாகத்தான் செயல்பட்டு வந்துள்ளன.
அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான என்ரானையே தூக்கியெறியத் தெம்பில்லாத பா.ஜ.க., இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் எனக் கோருவதை, கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையோடுதான் ஒப்பிட முடியும்.

1998இல் பா.ஜ.க. ஆட்சியில் இரண்டாம் முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியபின், ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரத் தடையில் இருந்து தப்பிக்க, அப்பொழுது பிரதமராக இருந்த வாஜ்பாயி, ""இனி இந்தியா அணுகுண்டுப் பரிசோதனை நடத்தாது'' என ஐ.நா. மன்றத்திலேயே வாக்குறுதி அளித்தார். அப்பொழுது பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா, இந்தியாவின் அணு உலைகளைக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரச் சம்மதிப்பதாக, அமெரிக்காவின் உள்துறைச் செயலராக இருந்த காலின் பாவெல்லிடம் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் உருவாவதற்கு இவைதான் அடிப்படைகள் என்கிறது அமெரிக்கா. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பா.ஜ.க. போட்டுச் சென்ற கோட்டில், காங்கிரசு ரோடு போட்டுவிட்டது என்பதுதான் உண்மை.
···
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவோ, இந்தியாவை வல்லரசாக்கும் நோக்கத்திற்காகவோ உருவாக்கப்படவில்லை. இந்தியா பாகிஸ்தான் ஈரான் நாடுகளிடையே உருவாகவிருந்த எரிவாயு ஒப்பந்தத்தைத் தகர்ப்பதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அரசுதந்திரம்தான் இந்த ஒப்பந்தம்.

""ஈரானுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால், இந்தியாவிற்கு அணுசக்தி துறையில் உதவுவோம்; இந்தியாவை வல்லரசாக்குவோம்'' என ஆசைகாட்டிய அமெரிக்கா, ""இதற்கு மறுத்தால், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்போம்'' என கடந்த மார்ச் 2005இல் மிரட்டல் விட்டது.

இது ஒருபுறமிருக்க, ""புதிய நூற்றாண்டுக்கான அமெரிக்காவின் திட்டம்'' ஆசியாவில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்டுத்தக் கோருகிறது. அமெரிக்காவின் இந்த மேலாதிக்க நோக்கத்திற்கு இந்தியாவை அடியாளாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது, அமெரிக்கா. ஏற்கெனவே சீன எதிர்ப்பில் மூழ்கிப் போயிருக்கும் இந்தியா; தெற்காசியாவில் அமெரிக்காவின் அடியாளாக அங்கீகாரம் பெறுவதற்கு ஏங்கிக் கொண்டிருந்த இந்தியா, அமெரிக்கா வீசியெறிந்த இந்த எலும்புத் துண்டை, அணுசக்தி ஒப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா இந்தியா இடையே நடக்கவிருக்கும் அணுசக்தி வியாபாரத்தில் தனியார் முதலாளிகளும் பங்கு பெறலாம் என்பதால், இந்தியத் தரகு முதலாளிகள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கிறார்கள். 4,50,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்த வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்திற்காகவே, ""இறையாண்மை, சுயசார்பு'' போன்ற பழைய முகமூடிகளை அவிழ்த்து வீசிவிடத் தயாராகி வருகிறார்கள்.

அதனால்தான், நாட்டின் சுயமரியாதைக்கே எதிராக உள்ள இந்தச் சட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கத் துணியாத மன்மோகன் சிங் கும்பல், ""இந்தச் சட்டம் அமெரிக்க அதிபரைத்தான் கட்டுப்படுத்தும்; இந்தியாவை அல்ல'' என சால்ஜாப்பு சொல்கிறார். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியா அமெரிக்கா இடையே உருவாகவுள்ள ""123 ஒப்பந்தத்தில்'' ங்""ஹைட்'' சட்டத்தின் அடிப்படையில் இந்தியா அமெரிக்கா இடையே கையெழுத்தாகவிருக்கும் ஒப்பந்தத்தின் பெயர் தான் "123 ஒப்பந்தம்'. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான் இந்தியாஅமெரிக்கா இடையே அணுசக்தி கூட்டுறவும், வர்த்தகமும் தொடங்கப்படும்.சி இந்த விதிகளைச் சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என வீராப்பு பேசுகிறார்.

""அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இந்தியா பணிந்து போன இரகசியம் மார்ச் மாதம் அம்பலமானபொழுது, அமெரிக்கச் சட்டம் வரட்டும் எனக் கூறி நம்மை முட்டாளாக்கினார்கள்; அமெரிக்க சட்டம் வந்த பிறகு "123 ஒப்பந்தம்' வரட்டும் எனக் கூறி நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்'' என மன்மோகன் சிங்கின் வீராப்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் ஏ.என். பிரசாத் அம்பலப்படுத்துகிறார்.

சர்வதேச அணுசக்தி கமிசனில் ஈரானுக்கு எதிராக இந்தியா மூன்று முறை வாக்களித்தது; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட வெனிசுலாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என வெள்ளை மாளிகையில் இருந்துவந்த தொலைபேசி மிரட்டலைப் பூசி மெழுகியது போன்ற விவகாரங்கள், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்காதான் தீர்மானிக்கிறது என்பதை ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் மீது இந்தியா ஒரு துப்பாக்கி ரவையைக் கூடச் சுட முடியாது என்ற கேவலமான உண்மையும், நாடாளுமன்றத் தாக்குதலின் பின் நடத்தப்பட்ட படை திரட்டலின் பொழுது பச்சையாகத் தெரிந்துவிட்டது. எனவே, புதிய அணுகுண்டு சோதனைகள் நடத்த வேண்டிய தேவையும் இந்தியாவிற்குக் கிடையாது.இப்படிப்பட்ட நிலையில், அமெரிக்கச் சட்டத்தில் உள்ள நிபந்தனைகள், ""123 ஒப்பந்தத்தில்'' சேர்க்கப்பட்டாலும், சேர்க்கப்படாவிட்டாலும், இந்தியாவின் அமெரிக்க அடிவருடித்தனத்தில் எந்த மாற்றமும் வந்துவிடாது என்பதே உண்மை.

தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் நாடே மறுகாலனியாக்கப்பட்டு வரும் வேளையில், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையும், அணுசக்திக் கொள்கையும் மட்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடின்றிச் சுதந்திரமாக இயங்க முடியும் என நம்புவதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால், போலி கம்யூனிஸ்டுகளோ, கடந்த ஆண்டு ஜூலையில் புஷ்ஷûக்கும், மன்மோகன் சிங்குக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, அமெரிக்கச் சட்டமும், 123 ஒப்பந்தமும் இருக்க வேண்டும் எனக் கூச்சல் போடுகிறார்கள். அடியாளாக இருந்தாலும், கொஞ்சம் கௌரவமான அடியாளாக இருக்க வேண்டும். (இசுரேலைப் போல!) என்பதுதவிர, இந்த எதிர்ப்புக்கு வேறு பொருள் கிடையாது.
.
· செல்வம்
..